இராமநாதபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி..

​இராமநாதபுரம் அரண்மனை அருகில் இன்று (29.06.2017) காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் நாள் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவின் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

​இப்பேரணியில் இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தாசீம்பீவி அப்துல்காதர் கலைக்கல்லூரி, செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் செய்யதம்மாள் கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது அரண்மனை வாயிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை சந்திப்பில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் போதைப் பொருள் விழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

​இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் எல்.ராஜூ, மாவட்ட செஞ்சிலுவைச் சங்க துணை சேர்மன் தஹாரூன், செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், செயலாளர் ராக்பாண்ட் மதுரம் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..