இராமநாதபுரம் மாவட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தியாளர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி குறித்த (GST) விழிப்புணர்வு குழுக் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (28.06.2017) மாவட்ட தொழில் மையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தியாளர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி குறித்த (GST) விழிப்புணர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது, இந்திய தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு விதமான மதிப்பு கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் குறிப்பிட்ட பொருளின் விலை பிற மாநிலங்களில் மாறுபடும். அந்தந்த மாநிலத்தின் வேறுபட்ட வரி விதிப்பு கொள்கையே இதற்கு காரணமாகும்.

தற்போது மத்திய அரசு ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு வரும் 01.07.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரியினை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜி.எஸ்.டி.(GST) குறித்து அனைத்து தரப்பு மக்கள், வணிக பெருமக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

​தமிழ்நாடு அரசும் 01.07.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரியினை (GST) நடைமுறைப்படுத்திடவுள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வணிகத் துறை சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. GST வரியைப் பொறுத்த வரை உலகளவில் தற்போது 138 நாடுகள் GST வரி முறையினை செயல்படுத்தி வருகின்றது. இந்த வரி நடைமுறையின் மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்தார்.

​இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் .ப.மாரியம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்த கேள்விகளுக்கு இராமநாதபுரம் வணிக வரித்துறை அலுவலகத்தின் தகோ.ராஜீவ்குமார் மற்றும் வணிக வரித் துறை ஆய்வாளர் திருக்குமாரவேல் ஆகியோர் GST தொடர்பான தெளிவுரைகள் வழங்கினார்கள். மேலும் சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) சிறப்பு அம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டது. நிறைவாக ஆ.குமரேசன் புள்ளி விவர ஆய்வாளர், மாவட்ட தொழில் இராமநாதபுரம் நன்றியுரை வழங்கினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..