புனித மாதத்தில் அமைதியை குலைக்க நாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித நேய மக்கள் கட்சி தலைவர் அறிக்கை..

சேதுபதி மன்னர் – வள்ளல் சீதக்காடி மரைக்காயர் காலம் தொடங்கி காலங்காலமாக இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகின்றது. ராமநாதபுரம் நகரில் நிலவி வரும் இந்த நல்லிணக்கத்தை குலைப்பதற்கு திட்டமிட்டு சில வகுப்புவாத கட்சிகளும் அமைப்புகளும் சமீப காலமாக தீவிர முயற்சிகள் எடுத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது.

ராமநாதபுரத்தில் தங்கப்பா நகரில் இயங்கி வரும் அரபு பாடசாலை (மத்ரசா) மீது கடந்த ஜீன் 22 அன்று இரவு நேரத்தில் பாஜக நகரச் செயலாளர் அசுவின் குமார் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்று முஸ்லிம் ஆண்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் இருந்த சூழலில் இந்த அரபு பாடசாலையில் பெண்கள் தொழுது கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் நகரச் செயலாளராக இருக்கும் அசுவின் அரண்மனை பகுதியில் செல்பேசி கடை நடத்திவருகிறார். அவருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் தனிப்பட்ட முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அசுவின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜாபர் சாதிக் கைதுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அசுவின் தன் மீது தனது தந்தையின் மீதும் தாக்குதல் நடைபெற்றதாக சொல்லிக் கொண்டு தனியாக இரவில் பெண்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பாடசாலை மீது தாக்குதல் நடத்தியிருப்பது கோழைத்தனமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வன்முறையை கையிலெடுத்த பாஜக நகரச் செயலாளரின் ஆதரவாளர்கள் தங்கப்ப நகரில் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு சட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக சமூக வளைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் இல்லை என அறிக்கை அளித்த பிறகு அவரது கட்சியை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளனர் என்று சொல்வது திட்டமிட்டு சமூக நல்லிணக்க்தை குலைத்து தம்மை வளர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியாகவே உள்ளது.

தங்கப்ப நகரில் குறிப்பிட்ட அந்த அரபு பாடசாலை நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றது. புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவாய் துறை அதிகாரிகள் உட்பட முறையாக அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அந்த தினத்தில் அந்த பாடசாலையில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவல்துறை பெண்கள் தொழுகை நடத்தும் நேரத்தில் அங்கு பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை செய்ய தவறியதும் பெண்கள் மீதான அஸ்வின் கும்பலின் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அரபு பாடசாலை மூடப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என்று ராமநாதபுரம் காவல் உயர் அதிகாரி ஒருவர் சமூக வளைத்தளங்களில் உலா வரும் தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்.

கடந்த சில மாதங்களாக அசுவின் சமூக வளைத்தளங்களில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. மணிகண்டன் உட்பட பலர் மீது மிக அருவெறுப்பான வன்முறையை தூண்டும் பதிவுகளை செய்து வருகிறார். காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அரபு பாடசாலை மீதான தாக்குதல் போன்ற சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயலை தவிர்த்திருக்கலாம்.

அஸ்வின் மற்றும் அவரது தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். திட்டமிட்டு வதந்திகளை பரப்பியதுடன் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி ராமநாதபுரத்தில் அமைதியை குலைக்க தொடர்ந்து முயற்சித்து வரும் அஸ்வின் குமார் உள்ளிட்ட பாஜகவினரை உடனடியாக கைதுச் செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அசுவினின் புகாரின் அடிப்படையில் முஸ்லிம்கள் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்ப பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள கட்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..