மீன் பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் கீழக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

வங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 30 வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த தடை 60 நாட்களாக உயர்த்தப்பட்டதை அடுத்து ஜூன் 14 ஆம் தேதி வரை மீன் பிடித் தடைக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன் பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், பகுதி மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குள் மீன் பிடிக்க தங்கள் படகுகளுடன் சென்றனர்.

இது போன்ற மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் மாற்று வேலைகளுக்கு செல்கின்றனர். மேலும் படகுகள், வலைகளை பழுதுபார்க்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த தடை காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மீனவ சமுதாய மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீன்பிடி தடையால் தமிழகத்தில் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் 100 சதவீதத்திற்கும் மேல் அனைத்து மீன்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் மீனவர்கள் உற்சாக பெருக்குடன் ஆழ் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல துவங்கியிருப்பதால் மீன்களின் வரத்தும் அதிகரிப்பதோடு அதன் விலையும் இன்னும் ஒரு சில நாட்களில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..