பள்ளி மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் திறனறி புத்தகம் வெளியிட்டு கீழக்கரை ஆசிரிய தம்பதி சாதனை

பள்ளி மாணவர்களாக மேல் நிலை கல்வி பயிலும் காலங்களில் பலருக்கும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் ஐ.பி.எஸ் ஆக வேண்டும், அரசு வேலைக்கு செல்ல வேண்டும், உயர் பதவிகள் வகிக்க வேண்டும் என்றெல்லாம் மிகப் பெரிய கனவு இருக்கும். ஆனால் எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்வது..? தங்களுடைய இலக்கை எப்படி அடைவது என்பது குறித்து பள்ளிகளோ, கல்லூரியிலோ பயிற்றுவிப்பது இல்லை. இறைவன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பிரத்யோக தனித் திறமைகளோடு தான் அனைவரையும் படைத்திருக்கிறான். அதனை பள்ளி மாணவர்களாக இருக்கும் நிலையில் நாம் அறியாமல் விட்டு விடுகிறோம்.

ஆகவே பள்ளி மாணவர்கள், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் யுக்திகளை, வழிமுறைகளை, அதன் பாடத் திட்டங்களை அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக எளிய முறையில் கீழக்கரை அன்பு நகரை சேர்ந்த மோகன் – சசிகலா ஆசிரிய தம்பதி, 550 பக்கங்களை கொண்ட புத்தகமாக தொகுத்து வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறனறி ஊக்க பயிற்சிகளும் அளித்து சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். ஆசிரியர் மோகன் கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆசிரியர் மோகன் நம்மிடையே பேசுகையில் ”இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில், படித்த நபர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களில் இருந்து மிகக் திறமையான, கூர் சிந்தனையுள்ள, தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்த போட்டித் தேர்வுகள் இன்றியமையாத ஒன்றாக மாறி விடுகின்றது. மேலும் உயர்கல்வி பயில தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்கவும், அவர்களுக்கான உதவித் தொகைகளை பெறுவதற்கும், தலைசிறந்த பல்கலை கழகங்களில் சேர்வதற்கும், மத்திய, மாநில அரசு பணிகளில் இணைவதற்கும், தனியார் துறை வேலை வாய்ப்பிற்கும் இந்த போட்டித் தேர்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

திறனறித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பாலும் TNPSC, SSC, IBPS, RRB, POLICE SELECTION, UPSC போன்ற அரசு போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகிறது. எண்ணிலடங்கா திறனாய்வுத் தேர்வுகள் பள்ளிகள் அளவில் இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேசிய வருவாய் வழி மற்றும் உதவித்திட்ட திறன் தேர்வு (NMMS), ஊரக திறனாய்வுத் தேர்வு (NTSE), தேசிய திறனாய்வுத் தேர்வு (TRUST), போன்ற தேர்வுகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பெரும்பாலும் சமூக, பொருளாதார நிலையில் விளிம்பு நிலையில் உள்ளவர்களாகவும், கிராமம், குக்கிராமங்களில் வசிப்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு CBSC, ICSE பாட திட்டங்களில் படித்த பெரு நகரங்களில் பயிலும் பிற மாணாக்கர்களுடன் பொதுவான போட்டித் தேர்வுகளில் போட்டியிடும் போது பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இக்குறையை போக்க நமது மாணவர்களை பள்ளி அளவிலே நடைபெறும் போட்டித் தேர்வுகளான திறனாய்வு தேர்வுகளில் அனைவரையும் பங்கு பெற செய்து, போட்டிகள் நிறைந்த இவ்வுலகை எதிர்கொள்ள தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. மேலும் ஒரு மாணவர் திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்கும் போதும், வெற்றி பெறும் போதும் அவர்களுக்குள் எழும் உத்வேகமானது எதிர்காலத்தில் தாம் எழுதவுள்ள பல போட்டித் தேர்வுகளை மன தைரியத்துடன் சந்திக்க தூண்டு கோலாய் அமையும்.

இந்த திறனாய்வு தேர்வுகள் வகுப்பு தேர்வுகளில் இருந்து முற்றும் மாறுபட்டு இருப்பதால் திட்டமிடல், முறையான பயிற்சி, வழிகாட்டுதல் அவசியமாக உள்ளது. ஆகவே இந்த தேர்வுகளின் முக்கியத்துவத்தை மாணாக்கர்களுக்கு எடுத்து கூறி திறனாய்வுத் தேர்வுகளின் மீது ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் திறனாய்வு தேர்வுகளின் பகுதிகளை நன்கு ஆராய்ந்து ஆறாம் வகுப்பிலிருந்தே குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

புத்தகம் தேவைக்கு :

ஆசிரியர். மோகன்  :   9715160005 / 8220850707

புனித ரமலான் வாழ்த்துக்கள்..