நீங்கள் கீழக்கரை வாசியா?? பல் வலியா?? அப்படியென்றால் உங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறைதான் பல் வலி வர வேண்டும்…இல்லையென்றால் வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்…

ஆலும், வேலம் பல்லுக்கு உறுதி அதாவது ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விலக்கும் தூரிகையாக பயன்படுத்தினால் பல்லும் ஈறும் உறுதியாக இருக்கும் என்பது பழமொழி.  அக்காலத்தில் சாம்பல், உப்பு ,போன்றவற்றை கொண்டு பல் துலக்கியதால் இறுதி வரை பல் உறுதியாக இருந்தது.  ஆனால் மேல் நாட்டு கலாச்சாரம் படையெடுத்தது,  சாம்பம்,  உப்பு பல்லுக்கு கேடு என்று பற்பசையை பல வகையில் அறிமுகப்படுத்தினார்கள்.  இளைய தலைமுறை ஆலையும், வேலையும்,  சாம்பலையும்,  உப்பையும் மறந்து விட்ட நிலையில் உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா,  வேப்பமரத்தின் சத்து இருக்கிறதா என்று கவர்ச்சிகரமான நடிகைகளை வைத்து விட்ட கதையை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.

அன்று விஞ்ஞான வளர்ச்சி என்று புதிய கண்டுபிடிப்புகளின் பின்னால் சென்றோம்.  ஆனால் இன்று பல லட்சங்கள் வருமானத்தை ஈட்டும் பல் மருத்துவமனைகள் ஊரில் பல இடங்களில்.  கீழக்கரை போன்ற நகராட்சிகளில் பல் மருத்துவம் பார்ப்பதற்கு என்று பிரத்யேகமான அதிநவீன எந்திரங்களுடன் பல் மருத்து பிரிவு அரசாங்க மருத்துவமனையில் இருந்தாலும், பார்க்க வரும் மருத்துவரோ வாரத்திற்கு ஒரு முறைதான்.  ஆகையால் கீழக்கரையில் ஏழை மக்களுக்கு பல் வலி வந்தால் வாரத்தில் ஒரு முறைதான் வர வேண்டும் அதையும் மீறி அவர்களுக்கு பல் நோய் வந்தால் அவர்கள் கதி அதோ கதிதான்.

எல்லாவற்றையும் விட மிகவும் வேதனையான விசயம் அந்த வாரத்தில் ஒரு நாள் அத்திப்பூத்தாற் போல் பல்  மருத்துவரை சந்தித்தாலும், அவர் கூறும் எளிமையான பதில் இயந்திரம் பழுது ஆகையால் அடிப்படை வைத்தியம் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதுதான்.  இதற்கு காரணம் மருத்துவம் பார்க்கும் அரசு பல் மருத்துவர்கள் கைகாட்டும் தனியார் பல் மருத்துவமனைக்கு சென்று சாமானியர்களை வைத்தியம் பார்க்க வைப்பதுதான்.  அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள்தான் தனியார் மருத்துவமனையும் நடத்துகிறார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

இந்த அரசு மருத்துவர்களின் அலட்சியப்போக்கையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்த ஒரே வழி வெளிநாடுகளில் இருக்கும் கடுமையான சட்டம் போல் அரசு துறையில் பணிபுரிபவர்கள் தனியாக தொழில் தொடங்கவோ அல்லது தனியாக வேலைபார்ப்பதற்காக கடுமையான தண்டனையுடன் சட்டம் விதித்தால் தவிர இந்த அலட்சியத்தை நிறுத்த முடியாது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..