புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ??

ரமலான் மாத சிறப்புக் கட்டுரை..

புனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத கலாச்சார மாற்றம் அவ்வாறு எண்ண தோன்றுகிறது!!

ஓவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் எத்தனை கோர விபத்துகளை நம் கண் முன்னே கண்டாலும், நோன்பு காலங்களில் இரவில் சுற்றுவது ஒரு கட்டாய கடமை என்றே இளைஞர்கள் கருதுகிறார்கள். அதுவும் போட்டி போட்டுக்கொண்டு பைக்கில் படுவேகமாக குர்ஆன் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டிய இரவில் காதை பிளக்கும் சத்தத்துடன் கூச்சலிட்டு தெருவில் வலம் வரும் வாலிபர்கள். இதற்கு இளவட்டங்களை குறை கூறிவதை விட அவர்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி கொடுத்து தெருவில் தறிக்கெட்டு சுத்த அனுமதிக்கும் பெற்றோர்களைதான் கூற வேண்டும். இது போன்று எந்தக் கட்டுபாடும் இல்லாமல் திரியும் இந்த இளைய தலைமுறையினரை இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.

இந்த புனித ரமலான் மாதத்தில் பசியை உணர்ந்து நோன்பு வைக்க வேண்டிய நாம் வேறு எந்த மாதத்திலும் இல்லாதளவு வகை வகையான உணவுகளை படைத்து நாம் மார்க்கம் தடுக்க கூடிய வீண் விரயத்தை இந்த புனித மாதத்தில் ஒரு உணவு திருவிழா போல் தினம், தினம் செய்து வருகிறோம். ஆனால் உலகில் பல பகுதிகளில் பஞ்சத்தாலும், போரினாலும் ஒரு வேளை உணவுக்கும், சஹருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிப்பதை நாம் தினம், தினம் ஊடகங்கள் மூலம் பார்க்கிறோம், இது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டாமா??

இறைவழிபாட்டில் அதிகம், அதிகம் செலவு செய்ய வலியுறுத்தப்பட்ட இந்த புனித ரமலான் மாதத்தில், நோன்பு ஆரம்பித்த மறுநாளே பெருநாள் துணி எடுக்க ஜவுளிக்கடைகளில் குவியும் நம் மக்களை செயல்பாட்டை என்னவென்று சொல்வது, அறியாமையா?? அல்லது உலக வாழ்வின் உள்ள அளவில்லா ஈடுபாடா??

நோன்பு மாதத்தின் உண்மையான மகத்துவத்தை நாம் அறிந்தும் அலட்சியத்துடன் வாழ்ந்து வருகிறோம். நமது பிள்ளைகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்காமல் அவர்கள் செய்யும் பாவத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்கையாக அமைக்க இந்த புனித மாதத்தை பயன்படுத்தி, எந்த நோக்கத்திற்காக இறைவன் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறானோ அந்த நோக்கத்தையும், பலனையும் நாம் முழுமையாக பெற இறைவனை பிரார்த்திப்போம். நம்மைப் படைத்தவன் நமக்கு நல்வாழ்வை அமைத்து தருவான்.

கட்டுரையாளர்:- MMK. இபுராஹிம், தாளாளர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, கீழக்கரை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..