மாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…

சிறப்புக் கட்டுரை..

முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் அலசி ஆராய்ந்துள்ளது, இந்த வாசகனின் கட்டுரை….

யூகிக்கக்கூடிய வரலாறு: சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கீழக்கரையின் வடக்கு மூலையில் உடற்பிணி போக்கும் மருத்துவராகவோ, அகப்பிணி போக்கும் அறிஞராகவோ இருவர் வாழ்ந்து வந்தவர்கள் பின்னர் மக்களுக்கு உதவி செய்து வழி நடத்தி மக்களின் அபிமானத்திற்கு பாத்திரமானார்கள். அந்த அபிமானமானவர்கள் தான் கொந்த கருணை அப்பா, மரியம் பீவி அம்மாள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈத்பெருநாட்களில் பரஸ்பர வாழ்த்துக்காகவும், மரியாதைக்காகவும் (ஜியாரத்) சந்திக்கச்சென்றவர்கள், அவர்கள் மறைந்த பின்பும், அப்பழக்கம் வழக்கமாக மாறியது என்றே கூறலாம். பின்னர் கூட்டம் கூடியது, அதனால் உண்டானது திண்பண்ட கடைகளும், ராட்டினங்களும். ”ஜியாரத்துடன்” பொழுதுபோக்கு இணைந்தது… நாளடைவில் வழக்கம் மறந்து பொழுதுபோக்கே பிரதானமானது…..

இல்லாதவர்கள் பிழைப்பிற்காக கடை விரித்தார்கள்… இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்காக கடை விரித்தார்கள். அதை பொறுப்பாளர்கள் வருமானமாக பயண்படுத்தி ”வரி” விதித்தார்கள். ஆனால் “விதி” விதிக்கவில்லை. இந்த வழக்கம் தொடர்ந்தாலும், 20 வருடங்களுக்கு முன்னர்:-
  • போதிய வாகன வசதி கிடையாது,
  • போதிய “லைட்” வசதி கிடையாது,
  • மொபைல் ஃபோன்கள் கிடையாது, (ஏன் போஸ்ட் ஆபீஸ் தவிர வேறு எங்கும் லேன்ட்லைன் ஃபோனே கிடையாது.)
  • இன்றைய தொழில்நுட்பங்களும் அப்போது கிடையாது. ஆகையால் உள்ளூர்வாசிகளுக்கு திருவிழாவாகவே இந்த மணல்மேடு அமைந்தது. ஆகையினால் மணல் மேட்டின் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்த நேரம் அது உச்சி சாய்ந்தது முதல் சூரிய மறைவு வரை மட்டுமே. (மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை).

ஆனால் இன்று நிலைமை தலைகீழ்………..

மணல்மேட்டின் கட்டுப்பாடில்லாத நேரம், சூரிய மறைவிற்குப்பிறகு தான் தொடங்குகிறது, இரவு 10 மணிக்கு மேலும் கூட்டம். அதிகமானோர் வெளியூர் வாசிகள், அதுவும் பெண்கள் கூட்டம் அதிகம். இளவட்டங்கள் கைகளில் ஹை டெக் கேமரா மொபல்கள். அச்சுருத்தி சீறிப்பாயும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள். அதிலிருந்த கிளம்பும் வின்னைத் தொடும் காற்றை மாசுப்படுத்தும் புகைப்படலம்.
  • திருவிழாவில் வியாபாரம, நடத்த பிரத்யேக அனுமதி பெற கட்டணங்கள்….
  • பாதுகாப்பிற்கு வரும் காவல் துறைக்கான செலவினங்கள்…
  • கடை வைப்பவர்களிடம் “வரி” வசூல்….
  • அதையும் தாண்டி வரியில்லா ”திருட்டு” வியாபாரங்கள்….
  • அடுத்தவர்களின் பைகளை பதம் பார்க்கும் ஜேப்படி திருடர்கள்,
  • மணல் மேடை மாசு படுத்தும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பேப்பர்கள், துரித உணவு கழிவுகள்….
  • இப்படி பல….

மூன்று நாள் முடிந்து நான்காம் நாள் காலை முதல் சமூக ஆர்வலர்களின் “மணல்மேட்டில் சுகாதார சீர்கேடு” என்று கவலை. இந்த வழிமாறிய வழிமுறையை கடந்த 20-25 வருடங்களாக முறைப்படுத்த தெருவின் மீது அக்கறை கொண்டு தெரு சகோதரர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர் பட்டாளம் ஒன்று காவல் காத்து இரவு 7 மணி முதல் “பெண்களுக்கு மட்டும்” என்று முயற்சி செய்து பார்த்தது, மாணவர்கள் வைத்து கல்வி பொருட்காட்சி நடத்திப்பார்த்தது, ஆனால் இவை அனைத்தும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நிர்வாகம் போதிய ஒத்துழைப்பும், அங்கீகாரமும் இல்லாத காரணத்தால் அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர்.

அன்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒதுங்கியதின் விளைவு, இன்று ஆண்-பெண் கலப்பிற்கும், ஈவ் டீஸிங்கிற்கும், திருட்டிற்கும், அதிக விலை வியாபரங்களுக்கும், நிர்வாகமே காரணமாகி விட்ட அவல நிலை. ”காலைச்சுற்றிய நல்ல பாம்பாக” கிடக்கும் இந்த பிரச்சனையை பல நிர்வாக கமிட்டி பொறுப்புக்கு வந்து இம்மியளவும் முறைப்படுத்த முடியவில்லை, முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.

  • வரலாறு பேசப்போகும் இந்த முறைப்படுத்தல் எப்போது நடக்கும்?..
  • யார் அந்த நல்ல பெயரை தட்டிச்செல்லப்போகிறார்கள்?..
  • தெரு ஜமாத்தா, ஊர் ஜமாத்தா, நகராட்சியா, காவல்துறையா?..

ஊரின் நலனிலும், தெருவைச் சார்ந்தவன் என்ற முறையில் சில பின்வரும் வழிகளில் ஏதேனும் சிலவற்றை செயல்படுத்தும் பட்சத்தில் மணல் மேட்டை அனைவரும் மனம் விரும்பும் மேடாக மாற்றலாம்…….

1. சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் மட்டும் அனுமதி கொடுப்பது. 2. முறைப்படுத்தப்பட்ட நேரமாக மாலை 4 மணி முதல் 7 மணி வரை. 3. நுழைவு கட்டணமாக குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்தல். 4. ஒவ்வொரு கடையிலும், ராட்டினத்திலும் கண்டிப்பாக ஒரு பெண் வேலையாள் வைக்க நிர்பந்தித்தல். 5. மாலை 4 மணி முதல் 7மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்தும், தைக்கா முனையிலிருந்தும் மணல் மேட்டிற்கு வாகன போக்குவரத்தை தடை செய்தல். 6. ஏர்வாடி வளைவு ECR சலை வழியாக டெலிஃபோன் எக்ஸ்சேன்ஞ் வரை மட்டுமே வாகனங்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்குதல். 7. கடைகளுக்கு, ராட்டினங்களுக்கு முறையான கட்டணங்கள் நிர்ணயித்தல். 8. உள்ளூர் வாசிகள் கடை வைக்க முன்னுரிமை வழங்குதல்.. 9. பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க தனி இட வசதி செய்தல். 10. தெருவைச் சார்ந்த சமூக அமைப்புகளைக் கொண்டே நிகழ்வை கட்டுக்குள் வைக்க காவல் குழுக்கள் அமைத்தல்.

 

மாற்றம் ஒன்றே மாறாதது!!

இதை எழுத்துக்களில் எளிதாக எழுதிக்காட்டி விட்டேன், ஆனால் இதை செயல்படுத்தி ”களம் காண்பவர்களே  வெற்றியாளர்கள்.”

பொறுப்பிள் உள்ள நிர்வாகிகள் இறையருள் நாடி முயற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றத்தை உண்டாக்கலாம்!!

ஆதங்கத்துடனும், ஏக்கத்துடனும், கீழக்கரையைச் சார்ந்த கீழை நியூஸ் வாசகன்… (பெயர் குறிப்பிடுவதால் வயதில் சிறியவர்கள் கூறுவதால்  மூத்தவர்கள் இதை”கெளரவ” பிரச்சனயாக எடுத்துவிடக்கூடாது என்பதாலும்,நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் போகக்கூடாது என்பதாலும், இதைப்படிக்கும் “உங்கள் மனசாட்சியாக” இருந்து கொள்கிறேன்)

முக்கிய குறிப்பு:- இந்த நிகழ்வு சம்பந்தமாக ஆதாரப்பூர்வ வரலாறு மற்றும் முறைப்படுத்த மேலதிக விபரங்கள் இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு வரவேற்கிறோம், அதனை தொகுத்து வெளிட ஆவலாய் உள்ளோம்.

இது ஒரு வாசகனின் சமீபத்திய ஆதங்கம்தான், ஆனால் இது சம்பந்தமாக இதனால் ஏற்படும் குழப்பங்கள், கலாச்சார சீரழிவு மற்றும் சுற்றுபுற சூழல் பற்றி சமூக ஆர்வலர்கள் எழுப்பிய ஆதங்க பதிவுகளை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்…

http://keelaiilayyavan.blogspot.in/2013/08/blog-post_1798.html?m=0 http://keelaiilayyavan.blogspot.in/2013/10/blog-post_4577.html?m=1 http://keelainews.com/disclaimer/

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

4 Comments

  1. அருமையான, அவசியமான பதிவு
    (மணல்)மேடு விஷயத்தில் நாம் தாழ்ந்து விட்டோம்.

  2. மணல் மேடு நிகழ்வுகள் வருடா வருடம் மானம் போகும் நிகழ்வாக மாறி வருவது நன் மக்களுக்கு வேதனை அளிக்கக் கூடியதே. இந்த வருட நிகழ்வுக்கு போதிய காலம் உள்ளது. இது ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருப்பதால் ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும் கூடிய விரைவில் நல்லதொரு முடிவு ஏற்பட படைத்தவனிடமும் பொறுப்பு சாட்டுவோம் அசிங்கமோ விபரிதமோ ஏற்படும் முன்.

  3. அருமை இதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வர முயற்சி எடுக்கவும்

  4. அருமையான யோசனை. வயதில் சிறியவராக இருந்தாலும் , உங்களின் ஆதங்கம் (கட்டுரை) மேல்.
    நடைமுறை படுத்த எல்லோரும் முயற்ச்சி எடுக்க வேண்டும்.

Comments are closed.