நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..

புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் மாதம். இந்த புனித நாம் அடையும் ஒவ்வொரு வருடமும் அனேகருக்கு ஜகாத், ஃபித்ரா, ஸதக்கா, பெருநாள் காசு போன்ற காரியங்களில, ஈடுபடுவதும், அதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதும் நடக்கும். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறான செயல்பாடுகள் என்பதை எளிதாக விளக்குவதே இந்த சிறு குறிப்பின் நோக்கம்.

ஜகாத்:

கலிமா, தொழுகை, நோன்பு, “ஜகாத்”, ஹஜ் என்ற முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நாம் கீழே பட்டியலிட்ட வருமான வரம்பில் உள்ளவர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்கள். நாம் பெற்றிருக்கும் செல்ஙத்தை தூய்மையடைய செய்கிறது நம் வருமானத்தில் இருந்து வழாங்கும் ஜகாத்.

ஜகாத, ஒரு சந்திர வருடத்தில், தன் தேவைகளுக்குப் போக சேமிப்பிலிருக்கும் செல்வத்திற்கும் (அ), தன் தேவைகளுக்குப் போக மேலதிகமாக இருக்கும் சொத்திலிருந்தும் வரும் வருமானத்திற்கும் (ஆ),  தன் வியாபரத்திற்காக கொள்முதல் செய்துவைத்திருக்கும் பொருள் மதிப்பிலிருந்தும் (இ), 85 கிராம் அல்லது அதற்கு மேலாக இருக்கும் தன்தங்கத்திற்கும்(ஈ) உள்ள செல்வத்தில் 2.5% மதிப்பான செல்வத்தை (அ+ஆ+இ+ஈ = A * 2.5 /100) ஜகாத்தை கொடுக்க வேண்டும். ஜகாத் தொகையை இஸ்லாமியருகளுக்கு மட்டுமே வழங்க வலியுறுத்தப்படுகிறது.

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:277)

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜக்காத் விளங்குகிறது. எனவே நாம் ஜக்காத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது அவசியமாகும்.

ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான், (ஜகாத் என்னும்) தானங்கள், தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

ஜகாத் தொகையை பிரித்து பிரித்து யாசகம் போல்கொடுக்காமல், ஜகாத் பெறுபவர்கள் விரைவில் ஜகாத்கொடுப்பவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தோடஒரு பெருமதியான செல்வத்தை ஒரு ஆளுக்கோ, ஒருசிலருக்கோ கொடுத்தல் சிறப்பு. உறவுகள், ஊழியர்கள் என்று நம்மைச் சுற்றி உள்ளவர்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்குவழங்குவதும் சிறப்பு.

ஸதகா:

இயலாத எந்த சமூகத்தவர்க்கும் செய்யும் பொருளாதார மற்றும் எந்த உதவியும் ஸதகா வகையைச்சாரும். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நாம் செய்யும் அனைத்து உதவிகளும் ஒரு வகையான ஸதக்காதான்.

உதாரணத்திற்காக சில, தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொருஅடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா, மனைவியரிடம் வீடுகூடுவதும் ஸதகா,  இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்துகொள்வதும் ஸதகா, வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றிவிடுவதும் ஸதகா, ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஸதகா.

ஃபித்ரா:

ஃபித்ரா என்பது பெருநாளுக்கு முன்பாக தேவையுடையவர்களை, நாம் கொடுக்கும் ஃபித்ரா மூலம் தேவையற்றவர்களாக மாற்றி, அவர்களையும் மற்றவர்களைப் போல் பெருநாளில் நிறைவுடையர்களாக ஆக்குவதாகும், ஃபித்ராவின் தலையாய நோக்கம்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது.ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கும்.

ஃபித்ராவின் அளவு: ஒரு “ஸாவு” அரிசி அல்லது கோதுமை அல்லதுஅதன் மதிப்பிற்கான பணம். இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு “ஸாவு”என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது சிறப்பு. பெருநாள் காசு:

அன்பின் வெளிப்பாடாக, நாம் விரும்பியவர்ளுக்கு (எந்தசமூகத்தவருக்கும்) கொடுக்கப்படும் ஒரு பரிசு. தாய், தந்தையர் தன் குழந்தைகளுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, சிறார்களுக்கு நம் மகிழ்ச்சியை இதுவும் ஒரு வகையான ஸதக்கா வகையையேச் சாரும்.

நான் நம் கொடைகளை அல்லாஹ்வின் பிரித்தாளஇறைவன் அருள் புரிவானாக!! கட்டுரையாளர் துபாயில் இருந்து M. ரஸீம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..