இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் இன்று முதல் ஆதார் சேர்க்கை மையங்களில் செய்யலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று 17.04.17 முதல் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் ரேகை அல்லது கருவிழியை பதிவு செய்து தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பிக்கலாம்.

இதில் ஆதார் பதிவு செய்தல், 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய விரல் ரேகை மறு பதிவு செய்தல் ஆகியவற்றுக்கு கட்டணம் இல்லை. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்யவும், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றை புதுப்பிக்கவும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற ரூ.10 சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

இந்த நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணியாற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டரிடம் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க 1800 425 2911 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம்.

To Download Keelainews Android Application – Click on the Image