கீழக்கரையில் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

கீழக்கரை நகரில் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் செய்து வந்த சுகன்யா, ஸ்டார், உள்ளிட்ட தனியார் லாரிகள் நகருக்குள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் பவுடரை கலந்து வரும் கீழக்கரை நகராட்சி ஊழியர்களை கண்டித்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கீழக்கரை முக்குரோடு வரை குடங்களுடன் சென்று தண்ணீர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுடன் கீழக்கரை சட்டப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில் சுமூக நிலை எட்டப்பட்டு குடிநீர் லாரி ஸ்ட்ரைக் கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகன்யா வாட்டர் சப்ளை உரிமையாளர் முனியராஜ் நம்மிடையே பேசும் போது ”கீழக்கரை நகராட்சி சுகாதார ஊழியர்கள் தினமும் காலையில் அளவுக்கு அதிகமான குளோரின் பவுடரை, சுகாதாரமற்ற முறையில் ஒரு வாளியில் கரைத்து லாரியில் கொண்டுவரும் குடிநீருடன் கலந்து வருகின்றனர். விதிமுறைப்படி ஒரு லாரி கொளளவுள்ள குடிநீருக்கு 400 மில்லி கிராம் மட்டுமே இந்த குளோரினை கலக்க வேண்டும்.

ஆனால் முறையில்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு கலந்து விடுகின்றனர். இதனால் புதுவித நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. நகராட்சி ஆணையரிடமும் இது சம்பந்தமாக விளக்கம் அளித்து விட்டோம். சமூக ஆர்வலர்களின் கோரிக்கையின் பேரில், பொதுமக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தற்போது எங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புகிறோம்.

அதே வேளையில் மீண்டும் நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்று நடவடிக்கைகளை தொடர்ந்தால் காலவரையற்ற போராட்டத்தை துவங்குவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே நகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட ஊழியர்களை கண்டித்து அரசு விதிமுறைப்படி அவர்கள் செயலாற்ற அறிவுரை கூற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..