தமிழகத்தில் ‘மக்கள் நீதி மன்றம்’ மூலம் ஒரே நாளில் 83000 வழக்குகள் விசாரணை – 52000 வழக்குகளுக்கு தீர்வு

இந்தியா முழுமையும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது சனிக்கிழமை ‘லோக் அதாலத்’ என்கிற பெயரில் ‘மக்கள் நீதிமன்றம்’ நடத்தப்படுகிறது.

இந்த லோக் அதாலத்தில் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதால், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதே நேரம், வழக்குகளும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படாமல், விரைவாக முடிவுக்கு வரும்.

இந்நிலையில் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் லோக்-அதாலத்தில் பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மொத்தம் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டு 83000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் 52 ஆயிரத்து 225 வழக்குகளுக்கு நேற்று ஒரேநாளில் தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 124.33 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், மின்சாரம், குடிநீர், வருவாய் ஆர்ஜிதம், சொத்து வரி, திருமணம் தொடர்பான குடும்ப நல வழக்குகள், காப்பீடு வழக்குகள், காசோலை மோசடி, விசாரணைக்கு முந்தைய வழக்குகள் என பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளீதரன், எம்.கோவிந்த ராஜ் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் பி.கோகுல்தாஸ், ஜெ.நிஷாபானு ஆகியோரது தலைமையில் இரு அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.