கீழக்கரை நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது – கீழக்கரை மக்கள் களம் வேண்டுகோள்

உச்ச நீதிமன்றத்தின் மகத்தான உத்தரவை அடுத்து கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுமானக் கடை இழுத்து மூடப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டருக்குள் திறக்கப்பட்டிருந்த 3400 மதுக்கடைகளுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 90000 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. இந்த செய்திகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தற்போது மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர் முயற்சித்து வருகின்றனர்.

கோப்பு படம் : கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக்

மூடப்பட்ட கடைகளை மீண்டும் 501 வது மீட்டரில் திறப்பு விழா கண்டு விடலாம் என்கிற சீரழிந்து போன சிந்தனையில் அடுத்ததாக டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான இடம் தேடல் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குடி குடியை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று வாசகங்களை மட்டுமே எழுதி விட்டு அரசு மதுவை அத்தியாவசிய பொருளாக நம் இளைஞர்களுக்கும், இளம் தளிர்களுக்கும் அறிமுகப்படுத்தி சமுதாய சீரழிவை தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

கீழக்கரை மக்கள் களத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டப் போராளி அப்துர் ரஹ்மான் கூறுகையில் ”கீழக்கரை நெடுஞ்சாலையில் இழுத்து மூடப்பட்டு இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையை (கடை எண் : 6983), கீழக்கரை நகருக்குள் திறக்க யாரும் வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது. கீழக்கரை பகுதியில் வாழும் ஆளும் அரசியல்வாதிகள் சாராய அரசியலுக்கு ஒருபோதும் விலை போக கூடாது.

மதுவினால் நம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நினைத்துப் பார்த்து இட உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டும். வாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதனால் ஏற்படும் விபரீதங்களை உண்மையாக உணர்ந்து புதிய மதுக்கடைக்கு வாடகைக்கு இடம் தருவதை சமூகப் பொறுப்புடன், இறைவனுக்கு பயந்து சாராய கடைக்கு வாடகைக்கு இடம் தருவதை தவிர்க்க வேண்டும்.

அதையும் மீறி அரசியல்வியாதிகள், கீழக்கரை நகருக்குள் டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் அதன் பலன் உள்ளாட்சி தேர்தலிலும், சட்ட மன்ற தேர்தலிலும் கொஞ்சமும் குறைவின்றி கிடைக்கும். அதே போல் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் வாடகைக்கு இடம் தந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக கடையை காலி செய்ய மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.” இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.