இனி கைதானால் ரத்த சொந்தங்களின் மொபைலுக்கு SMS வரும் – சைபர் நெட்வொர்க்கில் வெற்றி கண்டு வரும் தமிழக காவல் துறை

நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவியல் ஆகிய துறைகளை சைபர் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கும் புதுவித முயற்சியில் தமிழக காவல் துறை தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘CCTNS’ எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 காவல் நிலையங்களும் ஏற்கெனவே கணினிமயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கம்ப்யூட்டரில் பதியப்படும் ஆன் லைன் FIR ல் குற்றவாளியின் அனைத்து விவரங்களும் இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த வலைப் பின்னல் திட்டத்தை தமிழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன்படி இனி யாராவது கைதானால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் குற்றவாளியின் கைது மற்றும் சரண்டர் விவரம், ஆஜர் மகஜர், நீதிமன்ற காவல் அடைப்பு, இறுதி அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, ஜாமீன் போன்ற நீதித்துறை தொடர் பான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக காவல் துறை சைபர் நெட்வொர்க்கில் மற்ற மாநிலங்களை விட மிக சிறப்பானதொரு வெற்றியை அடைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.