தகுதியான ஒப்பந்ததாரர்கள் பாதிக்கும் வகையில் தெரு விளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை உததரவு

சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகரை சேர்ந்த சி.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க மத்திய அரசு ரூ.329 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு, தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட ஆட்சியர்களும், 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு ‘செட்டுகளை’ கொள்முதல் செய்ய ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் தேவையில்லாத ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர். இந்த எல்.இ.டி.பல்புடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளை சென்னை மாநகராட்சியில் உள்ள எலெக்ட்ரிக்கல் பிரிவிடம் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவுக்கு மாநகராட்சி எலெக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை.

அரியானாவில் உள்ள தேசிய சோதனை மற்றும் அளவீட்டு பரிசோதனை வாரியம் என்ற மத்திய அரசு நிறுவனம் தான் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள தகுதியான அமைப்பாகும். இந்த அமைப்பிடம் ஒப்பந்ததாரர்கள் பலர் ஏற்கனவே எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளையும் ஆய்வுக்கு கொடுத்து தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளனர். ஆனால், இதனை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பதில்லை. மாநகராட்சி எலெக்ட்ரிக்கல் பிரிவில் தான் இந்த ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிபந்தனை, தேவையில்லாத முறைகேடுகளை உருவாக்கும். மேலும், இந்த நிபந்தனையினால், தகுதியான ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நிபந்தனையை ரத்து செய்யவேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்கா ராமன் ஆகியோர், எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய தெருவிளக்கு செட்டுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்த அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.