நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?

கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையால் (கடை எண் : 6983), இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள்  மாநில நெடுசாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது.

அதே போல் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனுக்களை சமூக ஆர்வலர்கள் பலரும் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பதில் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் மார்ச் 31 க்குள் மூட அதிரடி தீர்ப்பினை வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனை சுட்டி காட்டி மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்டப் போராளிகள் சார்பாக கடந்த மாதம் கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு உடனடியாக அகற்ற வேண்டி, உச்ச நீதி மன்ற தீர்ப்பின் நகல் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று  29.03.17 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேதகு நீதிவான்கள் நல்லதொரு தீர்ப்பை எழுதுவார்கள் என சமூக அக்கறை கொண்டவர்கள் காத்திருக்கின்றனர். கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடப்படுமா…? பொறுத்திருந்து பார்ப்போம்…