கீழக்கரை நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் – முஸ்லீம் ஜமாத்தினர் பங்கேற்பு

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் இன்று 28.03.17 மாலை 4 மணியளவில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து முஸ்லீம் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் பல்வேறு ஜமாத்தை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி பேசுகையில் ”திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிகாட்டுதல் படியும் நம் கீழக்கரை நகருக்கு அனைத்து வகையான சுகாதார மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

கூடுதலாக திடக் கழிவு மேலாண்மை பணிக்கு 12 மூன்று சக்கர வாகனங்களும், 12 டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகளும், 36 சிறிய அளவிலான குப்பை தொட்டிகளும் வாங்க டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நகரில் தேவையான இடங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். கீழக்கரை நகரில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக குறைவாக இருக்கிறது.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை முழுமையாக கைவிட வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இனி வரும் நாள்களில் அரசின் வழிகாட்டுதல் படி, சுகாதாரம் விஷயத்தில் ஒத்துழைப்பு தராத பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் திருமணம் போன்ற சிறப்பு வைபவ நிகழ்ச்சிகளின் போது கீழக்கரை நகராட்சியை அணுகினால், சிறிய சேவை கட்டணத்தில் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து முஸ்லீம் ஜமாத்தினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் ” என்று தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..