ஆட்டோவில் ‘ஆரஞ்ச் ஜுஸ்’ – கூடுதல் வருமானத்திற்கு புதுவித யுக்தியை கையாளும் கீழக்கரை ஆட்டோக்காரர்

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே, கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது. நண்பகல் வேளைகளில் வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக நாவறட்சியால் இளநீர், லஸ்ஸி, ஜுஸ் உள்ளிட்டவற்றை தேடி சென்று வாங்கி அருந்துகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த சிராஜுதீன் தன் ஆட்டோவின் பின் பக்கத்தில் ஜுஸ் பாத்திரத்தை பொருத்தி, ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டே கூலாக ஆரஞ்ச் ஜுஸ் விற்பனை செய்து கூடுதல் வருமானத்திற்கு வழி செய்திருக்கிறார்.

இந்த புது விதமான யுக்தியை கையாளும் ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் நம்மிடையே பேசுகையில் ”நான் கடந்த 5 வருடங்களாக கீழக்கரையில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஒட்டி வருகிறேன். தற்போது கோடை காலம் துவங்க இருப்பதால் நிச்சயம் பொதுமக்கள் ஜுஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி செல்வார்கள். எனவே எனக்கு இது போன்று நம் ஆட்டோவிலேயே ‘மொபைல் ஜுஸ் கடை’ வைத்தால் என்ன என்கிற ஆர்வத்தில் இதனை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன்.

பல நேரம் ஆட்டோவில் சவாரி வரும் பொதுமக்களே என்னிடம் அதிகமாக ஜுஸ் சாப்பிடுகின்றனர். இதனால் எனக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அதே போல நான் சவாரிக்காக காத்து நிற்கும் இடங்களிலும் ஆரஞ்ச் ஜுஸ் வியாபாரம் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்று ஆனந்தத்துடன் தெரிவித்தார்.