ஜாமீன் வழங்கும் போது நூதன நிபந்தனைகள் கூடாது – கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

கடந்த வாரம் அரியலூர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் ஒரு நூதன உத்தரவினை பிறப்பித்தார். ஜாமீன் வேண்டுமா..? 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் என்றும், ஜாமீனில் வெளியே வருபவர்கள் வெளிவரும் நாளில் இருந்து 20 நாள்களுக்குள் கருவேல மரங்களை வெட்டிய பிறகு அதற்கான சான்றிதழை விஏஓவிடம் சமர்பித்து ஓப்புதல் வாங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நூதன உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் ஜாமீன் வழங்கும்போது சீமைக் கருவேல மரங்களை வெட்ட வேண்டும், வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன போன்ற நூதனமான நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ஞானம் என்பவர் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘‘கீழமை நீதிமன்றங்களில் நிபந்தனை ஜாமீன் அளிக்கும்போது வழக் கத்துக்கு மாறாக கருவேல மரங்களை வெட்டச் சொல்வது, வன விலங்குகளுக்காக குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பக் கூறுவது போன்ற நிபந்தனைகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகள் சட்டத் தில் இல்லாதவை.

வழக்கில் தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விசாரணைக்கு முன்பாக அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மனித உரிமைக்கு எதிரானது. நீதி மன்றங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். எனவே கீழமை நீதிமன்றங்கள், நீதி பரிபாலனத்தின் போது கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் உத்தரவுகளையும், நிபந்தனைகளையும் பிறப்பிக்க வேண்டும்.

இதுபோல விதிக்கப்படும் நூதன நிபந்தனைகள் குற்றவாளிகள் குற் றத்தையும் செய்துவிட்டு, சீமைக் கருவேல மரங்களை வெட்டினால் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்மறையான எண்ணத்தையும், தவறான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்’’ என தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.