இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை

கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி

தமிழகத்தில் கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் முன்னரே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று  மார்ச் 22. சர்வதேச த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் உலகம் முழுவதும் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

தற்போது உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள் என்று ஐ.நா.சபை தெரிவிக்கின்றது. எதிர்கால தண்ணீர் தேவையை மனதிற்கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? அங்கு தண்ணீர் உள்ளதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் தான் சுத்தமான நீர். அதிலும் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான் உலகமனைத்திலுமுள்ள மனிதர்கள் அனைவரும் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது.

தண்ணீருக்கான சண்டைகள் நாள் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. வீதிகளில் மட்டுமில்லாமல் மாநிலங்களுக்கு இடையிலும் அது தொடருகின்றன. ஓர் எழுத்தாளன் இப்படி சொன்னான்: “மூன்றாம் உலகப்போர் அது தண்ணீருக்காக வேண்டி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை”. எனவே தான் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு, தேவை, அவசியம், குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென ஐ.நா.சபை மார்ச் 22ம் தேதியை தண்ணீர் தினமாக அறிவித்து ஒரு வார காலம் உலகெங்கும் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுப்டுத்துகின்றன. இப்படி மாசுபட்ட தண்ணீரை அருந்துவதால் உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போவதாகவும், டைபாய்டு, அமீபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்தாக்குதல் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மறுபுறம், வறட்சியாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டும் வருவதால் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆக “நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவன் சொன்னது போல மனித சமுதாயத்தின் அரணாக, இயக்கமாக விளங்கும் “தண்ணீர்” பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியம் முழு முஸ்லிம் உம்மாவிற்கும் உண்டு.

தண்ணீர் பற்றி இஸ்லாம் :

அல்லாஹ் தன் திருமறையில் பின்வரும் இறை வசனங்களில் தண்ணீர் குறித்து கூறுகின்றான்:
“தண்ணீரிலிருந்தே நாம் தான் உயிரினங்களை (படைத்தோம்) வெளிப்படுத்தினோம்”
அல்குர் ஆன்: 21:30

மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பின்னர், வானிலிருந்து சுத்தமான நீரை வெளியாக்குகின்றான். பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு இதன் மூலம் நாம் உயிரூட்டுவதற்காகவும், மேலும் நம்முடைய படப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும் தான்! இந்த நிகழ்வுகளை அவர்களிடையே அடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம். அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!   அல்குர் ஆன்: 25:48

அல்லாஹ் கூறுகின்றான்:
“என்ன? இவர்கள் பார்க்கவில்லையா? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் தண்ணீரை ஒலித்தோட செய்கின்றோம். அதிலிருந்து பயிகளை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களும் உண்ணுகின்றனர். இவர்களுடைய கால்நடைகளும் உண்ணுகின்றது” அல் குர் ஆன்: 32:27

அல்லாஹ் கூறுகின்றான்:
“மேலும் வானத்திலிருந்து அருள் மிக்க நீரினை இறக்கினோம். பின்னர் அதன் மூலம் தோட்டங்களையும், தானியங்களையும், குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற பேரீச்ச மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும்”  அல்குர் ஆன்: 50: 9-11

அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்காளா? அல்லது நாம் பொழியச் செய்கின்றோமா? நாம் விருப்பினால் நீங்கள் குடிக்க முடியாதபடி உவர்ப்பு நீராக ஆக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
அல்குர் ஆன்: 56: 68-70

அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர், மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.நிச்சயமாக, நாம் நீரை தாராளமாக பொழிந்தோம். பின்னர் வியக்கத்தகுந்த முறையில் பூமியைப் பிளந்தோம். பிறகு, அதில் தானியங்களையும், திராட்சைகளையும், காய்கறிகளையும், ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும், அடர்ந்த தோட்டங்களையும், விதவிதமான கனிகளையும், புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருட்களாகும் பொருட்டு”
அல்குர் ஆன்: 80: 24-32

மேற்கூறிய இறைவசனங்கள் அனைத்தும் தண்ணீரின் மூலம் மனித சமுதாயம் அடைந்து கொண்டிருக்கின்ற பயன்பாடுகள் குறித்தும், மனிதனின் மூலமே தண்ணீர் தான் என்பது பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

இன்றைய விஞ்ஞானம் மனித உடற்கூறுகள் 71 சதவீதம் தண்ணீரால் ஆனது என்கிறது. ஆக, தண்ணீர் ஒன்று இல்லையென்றால் இவ்வுலகம் உயிர்கோளம் என்ற நிலையையும், மனித சமுதாயம் வாழும் நிலையையும் எய்திருக்காது.

அருட்கொடையும், விசாரணை மன்றமும் :

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்திற்குமே கணக்கிலடங்காத அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதிலும் மனிதன்னுக்கு தான் வழங்கியுள்ள அருட்கொடைகள் பற்றி குறிப்பிடும் போது, “அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”.  அல்குர் ஆன்: 16:18

“மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே வந்தவை தாம்” அல்குர் ஆன்: 16:53  இப்படி கூறுகின்றான்,

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான் தரவில்லையா? குளிர்ந்த நீரைக்கொண்டு நான் தாகம் தீர்க்கவில்லையா? என்று தான் மனிதர்களிடம் அல்லாஹ் முதன்முதலில் விசாரிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி, இப்னுஹிப்பான்

இன்றைய விஞ்ஞானிகள் தண்ணீரை ஆய்வு செய்து “பூமி படைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பூமியிலுள்ள மொத்த தண்ணீரின் கன அளவு மாறவே இல்லை என்று கூறுகிறார்கள்” ஆனாலும், தண்ணீர் உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை பார்க்க முடிகிறது.

வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகிய தண்ணீரின் பயன்பாட்டை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் இஸ்லாம் கூறுகிற ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் ஒட்டு மொத்த மனித சமூகமும் பின்பற்றி நடக்க வேண்டும். வீண் விரயம் கூடாது.

“உண்ணுங்கள், பருகுங்கள்; பருகுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.  அல் குர் ஆன் : 7:32

ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும் நபித்தோழரிடம் “ஓடும் நதியில் நீர் உளூச் செய்தாலும் விரயம் செய்யாதீர்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

தண்ணீரை மாசுபடுத்துதல் கூடாது:

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், குளம், ஏரி, குட்டை போன்ற் நீர் நிலைகளில் சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில், மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிலைகளில் (ஆறு, குளம்) போன்றவற்றில் சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

ஆகவே அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற எந்தவொரு அருட்கொடையும் நம்மிடம் இருந்து பிடுங்கப்படாமல் இருக்க வேண்டுமானால் படைத்த இறைவனுக்கு நாம் நன்றியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் நன்றியுணர்வோடு நடந்து கொள்வீர்களானால் நாம் (நமது அருட்கொடைகளை) இன்னும் அதிகப்படுத்தி தருவோம்” என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்திய பின் பின்வரும் துஆவை ஓதுவார்கள் என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், ”இறைவா! நீயே புகழுகுறியவன், உன்னுடைய தனிபெரும் கருணையால் தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய்! எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயேயானால் நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்”

எனவே மாபெரும் அருட்கொடையான தண்ணீரை நாம் ஒவ்வொரு முறை பருகும் போதும், பயன் படுத்தும் போதும் அது நம்மை விட்டும் நீங்காமலிருக்க வல்ல ரஹ்மானுக்கு நன்றிணர்வை வெளிப்படுத்துகிற நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! ஆமின்

1 Comment

  1. இஸ்லாமிய பார்வையிலும்,விஞ்ஞான பார்வையிலும் தண்ணீரை பற்றிய இந்த ஆக்கபூர்வமான கட்டுரை மக்களை சிந்திக்க வைக்கும்.
    கட்டுரையாளர் அவர்களுக்கும்,கீழை நியூஸ் குழுமத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Comments are closed.