Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மர்ம காய்ச்சல், டெங்கு பாதிப்பில் சிக்கி தவிக்கும் கீழக்கரை மக்கள் – உடனடி நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

மர்ம காய்ச்சல், டெங்கு பாதிப்பில் சிக்கி தவிக்கும் கீழக்கரை மக்கள் – உடனடி நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

by keelai

கீழக்கரை நகராட்சி பகுதியில் அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், மலேரியா என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் தாலியை அடமானம் வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்கும் நிலைக்கு நடுத்தர மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் நான்கு நாள் சிகிச்சைக்கு ரூ.20000 பில் தீட்டுகின்றனர்.

இதுவே மதுரை என்றால் பில் தொகை ரூ.30000 ஐ தொட்டு விடுகிறது. டெங்கு காய்ச்சல்களுக்கு யார் காரணம்..? சுகாதாரம் பேணாத நகராட்சியா..? பொது மக்களா..? என்கிற பட்டி மன்றம் ஒரு பக்கம் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், நகராட்சிகள், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தமிழக சுகாதார துறை செயலாளர், சுகாதார துறை இயக்குனர், நகராட்சிகள் இயக்குநர், நகராட்சிகள் மண்டல இயக்குனர், சுகாதார துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் டெங்குவையும், மர்ம காய்ச்சலையும் ஒழிக்க கோரி கோரிக்கை மனுவினை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் பின்வரும் கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டெங்கு காய்ச்சலால் கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கீழக்கரையை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான மக்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கீழக்கரை நகராட்சி பகுதியில் 21 வார்டுகளும், சுமார் 114 தெருக்களை கொண்டு 60,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றார்கள். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் இருந்தும் ஒரு பணியாளர் மட்டுமே கொசு புகை மருந்து அடித்து வருகின்றார். மாவட்டத்தில் கீழக்கரை நகராட்சி பகுதி மட்டுமே டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதற்கு முக்கிய காரணம் சுகாதார துறை, நகராட்சி துறைகளின் செயல்பாடுகளில் தொய்வு நிலையாக இருக்குமோ..? என எண்ணத் தோன்றுகிறது. எனவே அரசு இப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் படி பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!