
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மருத்துவமனைக்கு டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல், வேலை நேரத்தில் ஓ.பி அடித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்கும்படி, சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் இனி இன்னும் சிறப்பாக தங்கள் பணிகளை செம்மையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.