கட்டப் பஞ்சாயத்து செய்து மனித உரிமை மீறும் தனியார் தொலை காட்சி நடிகைகள் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கறிஞர் பாலாஜி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நிஜங்கள் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளில் மனித உரிமை மீறுதலும் மற்றும் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதமாக கட்ட பஞ்சாயத்தும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் சினிமா பிரபலங்கள் நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாதிப்படைந்தவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் அளவிற்கு எந்த முன் அனுபவமும் தகுதியும் இல்லை. குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் மோசமாக எல்லை மீறி பேசுகிறார்கள்.

மேலும் இது போன்று குடும்ப கலாச்சார உறவுகளை பற்றிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தான் தொலைக்காட்சிகளில் ஓளிப்பரப்ப வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நடிகை குஷ்பு பிரபல டிவியில் கடந்த சில மாதங்களாக நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

குஷ்பு, இதில் கலந்து கொள்ளும் பெண்களை திட்டுவது, ஆண்களின் சட்டையை பிடித்து அடிப்பது என தனது எல்லையை மீறி நடந்து வருகிறார். மேலும் நிகழ்ச்சியில் அவர் ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தார். இதுபோன்று பல சட்டவிரோதமான செயல்கள் இந்த நிகழ்ச்சியில் நடக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்.

குடும்ப உறவுகள் குறித்து தவறான புரிதலை மக்களிடம் இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கிவிடும் என்று வழக்கறிஞர் பாலாஜி அவரது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் இதே போன்று பலர் இந்த நிகழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..