கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’ என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதம்.

கீழக்கரையில் கடந்த 1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கீழக்கரை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தற்போது லிட்டரி கிளப் அருகில் இருக்கும் கமுதி பால்கடை கட்டிடத்தில் அரசு ஏற்பாட்டில் பல முக்கியஸ்தர்களை கொண்டு தொடங்கப்பட்டது. அதன் தலைவராக மறைந்த M.M.K.முகம்மது இப்ராகீம் அவர்கள் இருந்தார். அந்த காலகட்டங்களில் கீழக்கரை,சுற்று வட்டாரங்களில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட பால் பண்ணைகள் இருந்தது. அந்த பண்ணைகளில் பசும்பாலும், எருமைப்பாலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நாட்டு பசு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் நலன் கருதி அரசு முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இந்த கூட்டுறவு சங்கம் மூலமாக சத்தான அன்று கறந்த கலப்படம் இல்லாத சுத்தமான பசும்பால் பொதுமக்களுக்கும் தேனீர் கடைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

கடந்த 42 ஆண்டுகளாக பசும்பால் வியாபாரம் செய்து வரும் ‘மில்க் மேன்’ கொம்பூதி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி நம்மிடையே பேசும் போது ”கீழக்கரையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் என்னுடன் எட்டு பால் வியாபாரிகள் பணியாற்றினர். நாளடைவில் இந்த சங்கத்தில் பல வியாபாரிகள் இணைந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கும், மாலை நான்கு மணிக்கும் சங்கத்திற்கு வியாபாரிகள் அனைவரும் ஆஜர் ஆகிவிடுவோம்.

பால் கறக்கும் விவசாயிகள் பாலை சங்கத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள். சங்கத்தில் இருக்கும் பாலை லிட்டர் கணக்கில் எடுத்து ஒவ்வொரு வியாபாரிகளும் சில தெருக்களை தேர்வு செய்து பால் வியாபாரம் செய்து வருவோம். சங்கத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் தண்ணீர் கலக்காத பாலை வழங்குவார்கள். நாங்களும் அந்த பாலை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வோம்.

தற்போது சங்கத்தில் பணியாற்றிய நான் மட்டுமே இந்த பால் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றேன். தற்போது எனக்கு 68 வயதாகிறது. கடந்த நாற்பத்திரெண்டு வருடங்களாக என் கிராமத்தில் இருந்து சைக்கிளில் பத்து கிலோமீட்டர் தூரம் காலையிலும், மாலையில் வந்து பால் வியாபாரம் செய்து வந்த நான் என் உடல்நிலையை கருதி கடந்த நான்கு வருடங்களாக TVS XL சொந்தமாக வாங்கி இதில் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றேன்.

சங்கத்தில் பணியாற்றிய போது மாதத்திற்கு ஒரு பகுதியாக சென்று வியாபாரம் செய்வோம். கடந்த 2010 அன்று சங்கத்தில் இருந்து விலகி தற்போது பால் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றேன். என் வாடிக்கை தெருவாக நடுத் தெரு பகுதியை தேர்வு செய்து வியாபாரம் செய்து வருகின்றேன். தற்போது என் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வேளானூர் பகுதியில் நாட்டு பசு வைத்து இருக்கும் ஆறு விவசாயிகள் இடம் பாலை பெற்று என் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றேன். காலை,மாலை சேர்த்து அறுபது லிட்டர் பால் தினமும் விற்பனை செய்கின்றேன் என்றார்.

பசும்பால் வியாபாரம் சம்பந்தமாக கீழக்கரை பிரமுகரும், சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கத்தின் பொருளாளருமான ஹபீப் முகம்மது தம்பி கூறுகையில் ”கீழக்கரையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலமாக சுத்தமான சத்து நிறைந்த தாய்ப்பாலுக்கு இணையான பசும்பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அந்த காலகட்டங்களில் பசும்பால் மீது நம்பிக்கை தன்மை இருந்தது. இன்றைய சூழ்நிலையில் நம்பிக்கை தன்மையின்றி பாக்கெட் பால்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களும்,குழந்தைகளும் பாதிக்கபடுகின்றார்கள். எனவே அரசு விவசாயிகள் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரம் பெருகவும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை புத்துணர்வு பெற செய்து பொது மக்களுக்கு சுத்தமான பசும்பால் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இதற்காக இயற்கை ஆர்வலர்கள் முன் வரவேண்டும். இதன் மூலம் நாட்டு பசு மாடுகள்,காளை மாடுகள் இனம் அழியாமல் காக்கபடுவதுடன் இயற்கை எரிவாயுக்கு மூல காரணமாக இருக்கும் சாணம் உற்பத்தியும் பெருகும்” என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..