கீழக்கரையில் சின்னஞ் சிறு சிறார்களின் சேமிப்பில் செய்யப்பட்ட சிறப்பான சேவைகள் – ‘அல் பய்யினா’ மெட்ரிக் பள்ளியின் அளப்பரிய முயற்சி  

கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஐந்தாண்டுகளாக அல் பய்யினா மெட்ரிக் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இஸ்லாமிய கல்வியை அடிப்படையாக கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடிய உலக கல்வியையும், தரமான ஆசிரிய பெருமக்களை கொண்டு வழங்கி வருகிறது.

தங்கள் மாணவ செல்வங்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தையும், தான் சேமிக்கும் செல்வதை வறியவர்களுக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உண்டியல் மூலம் சேமிக்கும் பழக்கம் பயிற்றுவிக்கப்பட்டது. கடந்த நான்கு  மாதங்களாக, பெற்றோர்கள் கொடுக்கும் காசுகளை சிறுக சிறுக சேர்த்த மாணவ செல்வங்கள் 75 பேர், மொத்தம் ரூ.30000 ஐ  பள்ளி நிர்வாகத்தினரிடம் நேற்று முன் தினம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாட்டில், பள்ளி மாணவ மாணவிகள் இரண்டு குழுக்களாக வெவ்வேறு இடங்களுக்கு தங்கள் சேமிப்பில் வாங்கிய பொருள்களோடு சென்றனர். முதல் குழுவில் இடம் பெற்ற 10 க்கும் மேற்பட்ட பள்ளி சிறார்கள் நேற்று 25.02.17 காலை 11.30 மணியளவில் கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்த 30 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழங்கள், பிரட் உள்ளிட்ட உணவு வகைகளை அளித்தனர்.

அதே போல் மற்றுமொரு குழுவில் இடம் பெற்று இருந்த 60 க்கும் மேற்பட்ட மாணவ சிறார்கள் முள்ளுவாடி பகுதியில் இருக்கும் எத்தீம் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று 12 அரிசி மூட்டைகளை  வழங்கி சிறப்பான சேவைகளை செய்தனர். பின்னர் பள்ளி சிறுவர்கள் தாங்கள் சேமித்த பணத்தில் உதவிகள் செய்த மன நிறைவோடு, இறைவனின் திரு பொருத்தத்தை எதிர் நோக்கியவர்களாய் பள்ளிக்கு திரும்பினர். இது போன்று சிறு வயது சிறார்களுக்கு வழங்கப்படும் தர்மம் செய்தல், பிறருக்கு உதவுதல், அறநெறியில் வாழுதல் உள்ளிட்ட நல்லொழுக்க பயிற்சிகளால் நற்சிந்தனையுள்ள சமூகத்தை உருவாக்கிட முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..