கீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்

கீழக்கரை பகுதியில் 40 வயதைக் கடந்து விட்டவர்கள், தாங்கள் சிறுவர்களாய் விளையாடி திரிந்த காலத்தில், தெருக்களுக்குள் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விதவிதமான டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதை மறந்திருக்க முடியாது. கீழக்கரை பகுதியில் இதற்கு சவுக்கு மிட்டாய், சவ்வு மிட்டாய், பொம்மை மிட்டாய் என பல பெயர்களில் அழைப்பதுண்டு.

அதிலும் நிச்சயமாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுத் பெருநாள் மணல் மேட்டு கண்காட்சி திடலில், ஊஞ்சலில் அமர்ந்தவாறு, பால்ய நண்பர்களுடன் புத்தாடைகள் பிசுக்கு தட்ட சவுக்கு மிட்டாயை ருசித்து சாப்பிட்ட, அந்த சுகமான அனுபவத்தை மறக்கவே முடியாது. தற்போது இந்த மிட்டாய் விற்பவர்களை எங்கும் பார்க்க முடிவதில்லை. இருப்பினும் கீழக்கரை மற்றும் அதன் அருகாமை கிராமப் பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையை சேர்ந்த இராமர் இந்த ஜவ்வு மிட்டாயை விற்பனை செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

நீளமான மூங்கில் கொம்பில் அதன் உச்சியில் ஒரு அழகான பொம்மை கையில் சிங்க்ச்சாவை, ஜிங்க்… ஜிங்க்…. ஜிங்க்…. என்று தட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருக்கும். அந்த பொம்மைக்கு அடியில் இருந்து ஜவ்மிட்டாய் அந்த மூங்கில் கொம்பில் சுத்தி வச்சிருப்பாங்க. அதை இலாவகமாக சடெக்கென இழுத்து, நொடி நேர மாயாஜால வித்தையாய் வாட்ச், பாம்பு, தேள், மயில், வாத்து, டிசைன் டிசையினா பொம்மைகள் என்று சவ்வு மிட்டாய்காரர் சிறுவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துவதை ஆச்சரியமாய் பார்க்க தனியொரு கூட்டம்.

சிறுவர்களுக்கு வாட்ச் டிசைனும், சிறுமியர்களுக்கு நெக்லஸ் டிசைனும் சவ்வு மிட்டாயில் நொடி நேரங்களில் உருவாக்கும் மிட்டாய்காரர், மீசை மிட்டாய் மட்டும் இலவசம் என்று அறிவிக்க சிறுவர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையெல்லாம் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும், 40 வயதை தாண்டிய பெருசுகள், மலரும் நினைவுகளை அசை போட்டவாறே தங்களுக்கும் ஒரு சவுக்கு மிட்டாய் என ஆர்டர் செய்தது நெகிழ்ச்சி.

To Download Keelainews Android Application – Click on the Image

1 Comment

  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…. நண்பனே.. நண்பனே… நண்பனே…
    இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? நண்பனே!!!

Comments are closed.