தனுஷ்கோடியில் அரை நூற்றாண்டுக்கு பின்னர் மீண்டும் தபால் நிலையம் – ‘கொழும்பு சபுராளிகளின்’ நீங்காத நினைவலைகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழித்தடமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடி துறைமுகம் திறக்கப்பட்ட போது தனுஷ்கோடியில் தபால் நிலையமும் நிறுவப்பட்டது. இலங்கையில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தபால்களும் கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்த பிறகு இங்கிருந்த தபால் நிலையம் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் அவை பிரித்து அனுப்பபட்டுக் கொண்டிருந்தது.

கீழக்கரையில் 1965 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு முன்னர், வளைகுடா நாடுகளுக்கு எல்லாம் பொருளாதாரம் தேடி செல்வதற்கு முன்னர், கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு தொழில் ரீதியாக பயணிப்பவர்கள் அதிகம் இருந்தனர். இன்னும் கூட அவர்களை ‘கொழும்பு சபுராளிகள்’ என்று இப்பகுதி மக்கள் அழைப்பது வழக்கம். இப்படி கொழும்பு, குருநாகலா, மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில்  இலங்கைக்கு கடல்வழி மார்க்கமாக செல்பவர்கள் தனுஷ் கோடி துறைமுகத்தில் இருந்து தான் கப்பல் மூலமாக செல்வர்.

அது போல், இப்போது நம் விரல்  நுனியில் இருப்பது போல தொலைத்தொடர்பு சாதனங்கள் எல்லாம் இல்லாத காலத்தில், ”கப்பலுக்கு போன மச்சான்.. கண்ணும் ரெண்டும் ஆசை மச்சான்… எப்பதான் வருவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்..” என்று மனைவி மக்களும், சொந்த பந்தங்களும் ஏங்கிய வேளைகளில், அங்கிருந்து அவர்கள் தன்  குடும்பத்தாருக்கு அனுப்பும் தபால்கள் தனுஷ் கோடி தபால் நிலையம் வந்து தான் பின்னர் கீழக்கரைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இவ்வாறு நம் கீழக்கரை சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும், நம் முன்னோர்களின் கால் தடம் பதிந்த வரலாற்று பிரசித்தி பெற்ற தனுஷ்கோடி துறைமுகம், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர்-22 அன்று தனுஷ்கோடி துறைமுகத்தை தாக்கிய கோரப் புயலால் தனுஷ்கோடியில் இருந்த துறைமுகக்கட்டிடம், பாஸ்போர்ட் அலுவலகம், ரயில் நிலையம், தபால் நிலையம், மாரியம்மன் கோயில், தேவாலயம், முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. இந்த புயலில் தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஜலசமாதி அடைந்தனர்.

1961-ம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்தாகவும், இங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை புயல் தாக்கி 53 ஆண்டுகள் ஆனநிலையிலும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடம் என முத்திரை குத்தப்பட்டு , மின்சாரம், மருத்துவம், குடிநீர் என எவ்விதமான அடிப்படை வசதிளும் இல்லாமல் முன்னூறுக்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு புதியதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு திறக்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ்கோடியில்  நிலையம் திறக்கப்பட்டது. ராமேசுவரம் கிழக்கு என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள தபால் நிலையம் தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று புதன்கிழமை முதல் இயங்குகிறது.

தபால் நிலைய திறப்பு விழாவிற்கு கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமை வகித்தார். துணை கோட்ட கண்காணிப்பாளர்கள் விஜய கோமதி, துளவிதாஸ், ராமேசுவரம் அஞ்சலக அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். புயலுக்கு முன்னர் தனுஷ்கோடியில் இயங்கிய தபால் நிலையத்தில் பணியாற்றிய குருசாமி புதிய தபால் நிலையத்தை துவங்கி வைத்தார்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

1 Comment

  1. அருமையான பதிவு. தனுஸ்கோடி அஞ்சல் நிலையத்திற்கு தனுஸ்கோடி என்றே பெயர் சூட்டியிர்கலாமே ! இராமேஸ்வரம் கிழக்கு என்றால் தனுஸ்கோடி முற்றிலும் மறைந்து விடுமல்லவா?

Comments are closed.