உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு விரைவில் புதிய ரயில் பாதை துவங்குகிறது

‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்படும் நம் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து பல்லாயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை அறிவித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.  இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேறினால் தங்கள் மாவட்டம் செல்வச் செழிப்போடு தொழில் வளம் மிக்கதாக மாறிவிடும் என பெரும் கனவோடு நம் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக இராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயலில் இருந்து புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தமிழக மின் பற்றாக்குறையை போக்க ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் தலா 800 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகு அனல் மின் உற்பத்தி திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011ல் அறிவித்தார்.  995 ஏக்கர் பரப்பளவில் 12 ஆயிரத்து 788 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ. 5,818 கோடி தொழில்நுட்ப பணிகள் பெல் நிறுவனத்திடமும், ரூ.4,800 கோடியில் திட்டம் சார்ந்த பணிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கொண்டு வருவதற்கு 25 கி.மீ., ரயில் பாதை அமையவுள்ளது. ரயில் பாதைக்காக அச்சுந்தன்வயல் முதல் திருப்பாலைக்குடி வரை 12 கிராமங்களில் நிலத்தை ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆய்வு செய்தனர்.

ஆய்வறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இதற்கான செலவின் குறிப்பிட்ட தொகை தமிழக மின் வாரியம் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டு உள்ளது. உயரதிகாரிகள் ஒப்புதல் அளித்ததும் புதிய ரயில் பாதை பணி விரைவில் துவங்கும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் மின் திட்டத்துக்கும், அமையவிருக்கும் ரயில் பாதைக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பின்றி நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image