கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், ஜல்லி, செங்கல், கட்டுமான இடிபாடுகள் போன்றவைகள்,போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கொட்டப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இந்த தெருக்களை கடந்து செல்ல முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து கீழக்கரை சட்டப் போராளி ஹமீது ராஜா அவர்கள் கூறும் போது ”சின்னக்கடை தெரு பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கான மணல் வடக்கு தெரு கொந்தக்கருணை அப்பா பகுதியில் கொட்டி செல்கினறனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழக்கரையில் எந்தப் பகுதிக்கு போனாலும் கட்டுமானப் பொருள்களை நடு ரோட்டில் கொட்டி விட்டு போய் விடுகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், இடறி கீழே விழுது விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

இந்த தெருக்களை கடந்து செல்லும் பள்ளி வாகனங்களும், ஆட்டோக்களும், சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருக்கும் மணல், ஜல்லி போன்றவற்றில் சிக்கி கடும் அவதி ஏற்படுகிறது. கீழக்கரை நகராட்சி பிரதான சாலைகளில் உள்ள மணல், ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கட்டுமான பொருள்களை கொட்டும் லாரிகள், டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் இந்த சாலையின் கடந்த கால நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். சிதிலமடைந்து கிடந்த இந்த சாலையை பல சமூக ஆர்வலர்களின் பல கட்ட போராட்டத்திற்கு பிறகே அரசாங்கத்திடம் இருந்து பெற முடிந்தது.  கஷ்டப்பட்டு பெற்ற இந்த சாலையை பேணி காக்க வேண்டியது இந்த பகுதி மக்களின் கடமையில் ஒரு பகுதியாகும்.  அந்த இடத்தின் கட்டுமானப் பணிக்கு அல்லாமல் வியாபார நோக்குடன் சாலைப்பகுதியை சீர்குலைப்பதை காணும் அச்சமயத்தில் தடுத்து நிறுத்த வேண்டும். அரசாங்கம் தரும் வசதிகளை தக்க வைத்து கொள்வதும் நம் கடமையாகும்.

சமுதாயத்தின் சுதந்திரம் என்பது, நாம் நினைப்பதை எல்லாம் செய்வது கிடையாது.  நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்தில் அனைவரும் அனைத்து சௌகரியங்களும் பெற்று வாழ்வதே.  ஆனால் தாம் செய்யும் செயலால் நாம் வாழும் சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் சிரமத்தைப் பற்றி கவலையில்லாமல் வாழ்வது மிகவும் வேதனைக்குரிய விசயம்.  எப்பொழுது ஒரு தனி மனிதனின் ஒழுக்கம் தழைத்தோங்குமோ அன்று சமுதாயம் முன்னேறும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Trackback / Pingback

  1. அலட்சியப்படுத்தும் கட்டிட காண்ட்ராக்டர்கள்… மெத்தனப் போக்கில் கீழக்கரை நகராட்சி… -கீழைநியூ

Comments are closed.